உலகம்

ரஷ்யாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - 11 நாட்களுக்கு ஊரடங்கு அமல்

Sinekadhara

ரஷ்யாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து அந்நாட்டில் 11 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் புதன்கிழமை 1,123 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 2,33,898ஆக உயர்ந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து இன்று அனைத்து கடைகள், பள்ளிகள், விளையாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. உணவு மற்றும் மருந்தகங்கள் தவிர அனைத்தையும் வருகிற நவம்பர் 7ஆம் தேதிவரை மூட ரஷ்ய அதிபர் விளாமிதிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. உள்நாட்டு தடுப்பூசியான ஸ்புட்னிக் வியை மக்களுக்கு செலுத்துவதில் அந்நாட்டு அரசு முனைப்பு காட்டி வந்தாலும், அங்குள்ள மக்கள் தடுப்பூசிக்கு எதிர்ப்புக்காட்டி வருகின்றனர். இன்றுவரை ரஷ்ய மக்கள்தொகையில் 32 சதவீதம் மட்டுமே இதுவரை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க அக்டோபர் 30 முதல் நவம்பர் 7 வரை நாடுமுழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தலைநகர் மாஸ்கோவிலும் அத்தியாவசியங்கள் தவிர மற்ற அனைத்தும் இன்றிலிருந்து மூடப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை சாலைகளில் நெரிசல் குறைவாக இருந்தாலும், மெட்ரோக்களில் கூட்டம் எப்போதும்போலத்தான் காணப்படுகிறது.

தொற்று பரவாமல் இருக்க அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க உத்தரவிட்டிருந்தாலும் பலரும் இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். கொரோனா தொற்று மேலும் அதிகரித்தால் ஊரடங்கு விதிமுறைகளை ரஷ்ய அரசு கடுமையாக்கலாம் எனத் தெரிகிறது.