சாக்சனி-ஆன்ஹால்ட் மாநிலத்தில் அரென்ட்ஸீ ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட மர எச்சங்கள், 10,500 ஆண்டுகளுக்கு முந்தைய நிரந்தரக் கட்டடங்களின் ஆதாரமாகும். இது, நியோலிதிக் இனத்துக்கு முன்பே மனித நாகரீகங்கள் இருந்ததைக் காட்டி, மனித வரலாற்றின் புதிய பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது.
செய்தியாளர் - கார்த்திகேயன்
எந்த மனித நாகரீகம் பழையது என்பதில், அனைத்து இனக் குழுக்களுக்கும் இடையே மிகப்பெரிய போட்டி உள்ளது. யார் பழையவர்கள் என்பதை தெரிந்துக் கொண்டு, பெருமை பேச, அனைவரும் ஆர்வமாகவே உள்ளனர். ஆனால், மனித சமூகத்தின் வரலாறு என்ன என்பதை தெரிந்துக் கொள்வதன் உண்மையான நோக்கம் வேறாக உள்ளது. முந்தைய கலாச்சாரங்களில் இருந்த மொழி, கலை மற்றும் அடையாளத்தை தெரிந்துக் கொள்ளவும், கடந்த கால நாகரீகங்கள் செய்த தவறு மூலம், நாம் தற்போது படிப்பிணை பெறவும் தான், மனித வரலாறு ஆராயப்படுகிறது. மேலும், முந்தைய காலத்தில் காணப்படும் கருவிகள் கொண்டு தான், தற்போதைய நவீன தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகிறது.
எனவே, எதிர்கால கண்டுபிடிப்புகளுக்கு உறுதுணையாக இருக்கவும், இதுமாதிரியான ஆய்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ஜெர்மனியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த ஒரு பொருள், மனிதர்களின் நிரந்தரக் குடியிருப்புகள் மற்றும் ஆரம்பகால மனித சமூகம் குறித்த பார்வையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. அதாவது, ஜெர்மனியின் சாக்சனி-ஆன்ஹால்ட் மாநிலத்தில் அரென்ட்ஸீ என்ற ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில், தொல்லியல்துறை ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.
அதன்படி, ஏரியில் 10 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய மர எச்சங்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த மர எச்சங்களில் உள்ள வெட்டுக் குறிகள், இவை நிரந்தரக் கட்டடங்களின் அமைப்பைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு, மத்திய ஐரோப்பாவில் நிரந்தரக் குடியிருப்புகள் மற்றும் நாகரீக வாழ்க்கை முறையை கொண்டு வந்தவர்கள் நியோலிதிக் என்ற இனக்குழு என்று கூறப்படுகிறது. இந்த இனக்குழு 5 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானவர்கள் என்று சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது கிடைத்துள்ள மர எச்சங்களை வைத்து பார்க்கும்போது, அவர்களுக்கு முன்பாகவே, மற்றொரு மனித நாகரீகம் இருந்தது தெளிவாகியுள்ளது. அதாவது 10,500 ஆண்டுகளுக்கு முன்பே நிரந்தரக் கட்டடங்கள் இருந்திருந்தால், அது வேட்டையாடிச் சேகரித்த மனிதர்கள் பற்றிய நமது புரிதலையும், நவீன கலாச்சார நிலப்பரப்புகளின் தோற்றத்தையும் மாற்றியமைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.