உலகம்

ஆட்சிமாற்றத்திற்கு பிறகு பயங்கர தாக்குதல் - காபூலில் குண்டுவெடிப்பில் 100 குழந்தைகள் பலி?

Abinaya

காபூலில் உள்ள ஒரு கல்வி மையத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 100 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் மற்றும் பலர் படுகாயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சம்பவத்தில் மாணவர்கள் உட்பட பெரும்பாலும் ஹசாராக்கள் மற்றும் ஷியாக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. முதலில் 19 பேர் பலி என்று செய்தி வெளியான நிலையில் தற்போது 100 குழந்தைகள் பலி என்று கூறப்படுகிறது. தாஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் உள்ள கல்வி மையத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டு இருக்கும்போது தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கையைக் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

ஆப்கானில் ஆட்சி மாற்றம் நடைபெற்று வரும் சூழலில், அங்குள்ள சிறுபான்மையினருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் உருவாகி உள்ளது. சிறுபான்மையினர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் குண்டு வெடிப்புகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. 

இப்பகுதியில் உள்ள பலர் ஹசாரா சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஹசாராக்கள் ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய இனக்குழுவாக உள்ள நிலையில், ஏற்கனவே இவர்கள் மீது கடந்த காலங்களில் தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது நடைபெற்றுள்ள தற்கொலைப்படை தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் ஐஎஸ் அமைப்பு தான் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.