சீனாவில் வீட்டுப்பாடம் செய்யாமல் இருந்ததற்கு தந்தை கண்டித்தால், அவர் போதைப்பொருள் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த 10 வயது சிறுவனின் செயல் பேசுபொருளாக மாறியுள்ளது.இறுதியில் நடந்தது என்ன பார்க்கலாம்.
குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலான ஒன்று.. குறிப்பாக சொல்லவேண்டுமெனில், அது ஒரு கலை. குழந்தையின் எதிர்கால கண்ணோட்டத்தை வடிவமைப்பதில், பெற்றோரின் பங்கு அளப்பரியது. அதிகமாக கொஞ்சிவிடவும் முடியாது. அதேசமயம் கோபத்தை மட்டுமே காட்டிக்கொண்டும் இருக்க முடியாது. எப்படி சரியாக நடந்துகொண்டாலும், சில குழந்தைகளுக்கு இருக்கும் குறுப்புதனத்தை கையாளவதற்கு தனிதிறமையே வேண்டும்..
இப்படித்தான், குறும்புக்கார சிறுவன் ஒருவன் விளையாட்டு தனமாக செய்த செயல், இறுதியில் அவரது தந்தைக்கு வினையாக வந்து முடிந்திருப்பதுதான் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கும் செய்தி.
சீனாவின் யோங்னிங் கவுண்டி பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார் 10 வயது சிறுவன். பள்ளிப்படித்துவரும் இவருக்கு அன்றாடம் பள்ளியில் வீட்டு பாடம் கொடுப்பது வழக்கம்... எப்பொழுதும் தவறாமல் வீட்டுபாடம் செய்யும் சிறுவன், அன்றைய தினம் செய்ய தவறியுள்ளார்.
இதனை அறிந்து கொண்ட தந்தை, சிறுவனை கடுமையாக சாடியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிறுவன், வீட்டுபாடத்தை செய்வதற்கு பதிலாக, அருகிலிருந்த கடைக்கு விரைந்துள்ளார். அந்த கடையில் இருந்த தொலைபேசியை எடுத்த சிறுவன், காவல்நிலையத்திற்கு அழைத்து, தனது தந்தை வீட்டில் அபின் வைத்திருப்பதாக கூறியுள்ளார். பிறகு எதுவும் தெரியாதது போல, வீட்டிற்கு வந்துவிட்டார்.
பின்னர், சிறுவனின் வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர், வீட்டில் போதைப்பொருள் இருக்கிறதா? என்று முழு சோதனை செய்துள்ளனர். சோதனை செய்ததில், வீட்டில் பால்கனியில் எட்டு உலர்ந்த அபின் காய்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, விளக்கமளித்த குழந்தையின் தந்தை, மருத்துவ நோக்கத்திற்காக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
சீனாவில் போதைப்பொருள் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்பதால், குழந்தையின் தந்தை கூறிய எதையும் போலீஸார் கேட்கவில்லை. எனவே, இந்த வழக்கையும், குழந்தையின் தந்தையையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர். இந்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், சிறுவனின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை..