செய்தியாளர்: பால வெற்றிவேல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிதி மற்றும் நிர்வாக ரீதியில் அமெரிக்காவின் செலவை குறைக்கும் வகையில் நாசாவிலிருந்து 10% பணியாளார்கள் பணி நீக்கம் செய்துள்ளார்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் 10% பணியாளர்களை பணி நீக்கம் செய்து டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது. தற்காலிக பணியாளர்கள் முழுமையாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது அமெரிக்க அறிவியல் இயக்கங்கள் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிதி மற்றும் நிர்வாக ரீதியில் அமெரிக்காவில் செலவை குறைக்கும் வகையில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அதில் ஒரு பகுதியாக மற்ற நாடுகளுக்கு அமெரிக்காவால் வழங்கப்படும் USAID என்கிற அமைப்பை கலைத்ததோடு, உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த ஆதரவையும் நிறுத்தியுள்ளது.
ராணுவம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட துறைகளில் நிதி சீர்திருத்தம் என்கிற பெயரில் ஆட்குறைப்பு செய்யப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அறிவியல் துறையிலும் கை வைத்துள்ளது டிரம்ப் அரசாங்கம்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் நிர்வாக ரீதியாக சீர்படுத்துவதற்காக 10% பணியாளர்களை நீக்கி உள்ளதாக ஹூஸ்டன் கிரானிக்கல் மற்றும் ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது. அதன்படி சுமார் ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் மற்றும் 750 நிரந்தர பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
750 நாசா ஊழியர்கள் அரசின் அழுத்தத்தால் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. டிரம்ப அரசின் கீழ் செயல்படும் நிர்வாக சீர்திருத்த துறையின் சார்பாக இந்த பரிந்துரை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பல்வேறு விதமான அடுக்குகளில் பணியாற்றி வருகின்றனர்.
அப்பல்லோ திட்டம் முடிவடைந்ததற்கு பிறகு அமெரிக்க அரசாங்கத்தால் நாசாவில் இருந்து மிகப்பெரிய அளவிலான ஆட்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல அறிவியல் அமைப்புகள் இடம் இருந்து எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹண்ட்ஸ்வில்லில் செயல்படும் மார்ஷல் ஆராய்ச்சி மையத்தின் பணியாளர்கள் அதிக அளவில் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவில் உள்ள அறிவியல் கிரக அமைப்பு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
சுமார் 20 லட்சம் விஞ்ஞானிகள் உறுப்பினராகக் கொண்ட இந்த அமைப்பில் அமெரிக்க அரசிற்கு திறந்த கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. முறையற்ற பணி நீக்கங்கள் நாசாவின் திறனை மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டுமே தவிர சீர்குலைக்கும் வகையில் இருக்கக் கூடாது என தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
ஆனால் தற்போதைய பணி மாற்றங்கள் எந்த முக்கிய விஞ்ஞான திட்டங்களுக்கும் திறன் வாய்ந்த விஞ்ஞானிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை வட்டாரங்கள், நிர்வாக பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதி மற்றும் நிர்வாக சீர்திருத்தத்தால் டிரம்ப் அரசாங்கம் பல்வேறு துறைகளில் ஆட்குறைப்பு நடத்தி வரும் நிலையில் உலகின் சக்தி மிக்க அமைப்புகளில் ஒன்றான நாசாவில் கை வைத்திருப்பது உலக விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.