உலகம்

பூமியை நெருங்கும் 1,600 அடி அகல சிறுகோள் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Veeramani

பூமியை நோக்கி மிகப்பெரிய சிறுகோள் ஒன்று வந்துகொண்டிருப்பதாக விண்வெளி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதனைக் கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, ராட்சத விண்வெளி சிறுகோள் 388945 (2008 TZ3) மே 16 அன்று அதிகாலை 2.48 மணிக்கு நமது கிரகத்தை நெருங்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த சிறுகோள் 1,608 அடி அகலம் கொண்டது என்றும், இது நியூயார்க்கின் சின்னமான எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தினை போல 1,454 அடி உயரத்தில் உள்ளது என்றும், இது ஈபிள் கோபுரம் மற்றும் லிபர்ட்டி சிலையை விட பெரியது என்று தெரிவித்துள்ளது.



ஒருவேளை இந்த சிறுகோள் பூமியைத் தாக்கினால் பெரும் சேதத்தை ஏற்படுத்தும். ஆனால் விண்வெளி விஞ்ஞானிகளின் கணக்கீடுகள் பூமியிலிருந்து சுமார் 2.5 மில்லியன் மைல் தொலைவில் இந்த சிறு கோள் நம்மை கடந்து செல்லும் என்று தெரிவித்துள்ளது.

இந்த சிறுகோள் பூமியை நெருங்குவது முதல் முறையல்ல, மே 2020 இல் பூமிக்கு மிக அருகில் 1.7 மில்லியன் மைல் தொலைவில் இந்த சிறுகோள் சென்றது. சூரியனைச் சுற்றி வரும்போது இந்த விண்வெளிப் பாறை, ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை பூமியைக் கடந்து செல்கிறது என நாசா தெரிவித்துள்ளது. அடுத்த முறை அது மே 2024 இல் சுமார் 6.9 மில்லியன் மைல்கள் தூரத்தில் இந்த சிறுகோள் பூமியை கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஒரு சிறுகோள் பூமியிலிருந்து 4.65 மில்லியன் மைல்களுக்குள் வந்தால் அது "ஆபத்தானதாக" விண்வெளி நிறுவனங்களால் எச்சரிக்கை செய்யப்படுகிறது. சிறுகோள்கள், விண்வெளி குப்பைகள், ஒரு கிரகத்தின் எச்சங்கள் போன்றவை விண்வெளியில் சுழன்று கொண்டே இருக்கும். அனால், சில பெரிய விண்வெளி பாறைகள் பூமிக்கு ஆபத்தானவை என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.