உலகம்

மாணவர்களுக்கு புத்தகங்கள் அச்சடிக்க காகித பற்றாக்குறை - கடும் நிதிநெருக்கடியில் பாகிஸ்தான்

ச. முத்துகிருஷ்ணன்

இலங்கையை தொடர்ந்து இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் கடன், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

இலங்கையில் ஏற்பட்டதைப் போல காகிதம் அச்சிடுவதற்கு கூட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாட்டு காகித நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பாகிஸ்தானில் கடுமையான காகித நெருக்கடி, நாட்டின் கல்வி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் அளவுக்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள மாணவர்கள் ஆகஸ்டில் தொடங்கும் அடுத்த கல்வியாண்டில் தங்கள் புத்தகங்களைப் பெற வாய்ப்பில்லை என்று பாகிஸ்தானின் காகித சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் அமெரிக்க டாலரை கடனாக பெற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் இஸ்மாயில் சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சீன வங்கிகள் கூட்டமைப்பு இன்று பாகிஸ்தானுக்கு 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க ஒப்புக்கொண்டதால் கடன் பத்திரத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அறிவித்துள்ள பெரும் மானியங்களைத் திரும்பப் பெறாமல் இருப்பதில் பாகிஸ்தான் அரசு குறியாக உள்ளது. இது மிகவும் தேவையான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவை நிறுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. கடினமான ஆனால் இன்றியமையாத கட்டமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளைத் தவிர்ப்பது மற்றும் நிதி உதவி மற்றும் ஆதரவிற்காக IMF மற்றும் அதன் ஆதரவுத் திட்டத்தின் திறனைக் குறைப்பதில் இலங்கை செய்த அதே தவறை பாகிஸ்தான் மீண்டும் செய்து வருவதாக வல்லுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.