உலகம்

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தமிழக வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா!

ச. முத்துகிருஷ்ணன்

இங்கிலாந்தின் பிரதமர் லிஸ் டிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சுயெல்லா பிராவர்மேன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக அந்நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக லிஸ் டிரஸ் அறிவிக்கப்பட்டார். லிஸ் டிரஸ் பிரதமரானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்தப் பதவிக்கு தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட சுயெல்லா பிராவர்மேன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், “ஒரு தவறு செய்து விட்டேன்! அரசு விதிகளை மீறி விட்டேன்!” என கூறி அவர் உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார் சுயெல்லா. இதுபற்றிய தனது ராஜினாமா கடிதம் ஒன்றை பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு அனுப்பியுள்ளார். எனினும், பிரதமர் லிஸ் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டதாக சுயெல்லா கூறியுள்ளார்.

சமீபத்தில் சுயெல்லா அளித்த பேட்டியொன்றில், “இங்கிலாந்து நாட்டில் குறைந்த திறனுடைய அகதிகள், சர்வதேச மாணவர்கள் ஆகியோர் அதிக அளவில் உள்ளனர். இவர்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்படைந்து உள்ளது. இந்த சர்வதேச மாணவர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். அதனால், இங்கிலாந்து நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க, புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கவும் மற்றும் குடியுரிமை கொள்கையை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது” என கூறினார்.

இந்த பேட்டி வெளியாகி சர்ச்சை வெடித்திருந்த நிலையில் மீண்டும் அவர் அளித்த மற்றொரு பேட்டியில், “விசா காலக்கெடு முடிந்த பின்பும், இங்கிலாந்தில் தங்கியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து மக்கள் ஒன்றும் இங்கிலாந்து எல்லைகளை இந்தியர்களுக்கு திறந்து விடுவதற்காக, பிரெக்சிட்டில் வாக்களிக்கவில்லை” என்று தெரிவிக்க சர்ச்சை தீ கொளுந்து விட்டு எரியத் துவங்கியது.

இந்தியர்களுக்கு எதிரான அவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு இந்திய தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசும் கடும் எதிர்வினையாற்றிய நிலையில், சுயெல்லா தீபாவளியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, “இந்திய வம்சாவளி மக்களாலேயே இங்கிலாந்தின் வளம் பெருகியுள்ளது. இந்திய சமூக உறுப்பினராக நான் இருப்பது பெருமைக்குரிய விசயம்.” என அப்படியே மாற்றிக் கூறினார். இந்த சூழலில் அமைச்சரவையில் இருந்து பதவி விலகும் முடிவை அவர் அறிவித்து உள்ளார்.

யார் இந்த சுயெல்லா..?

42 வயதான சுயெல்லா பிராவர்மேன், பிரதமர் பதவிக்கான போட்டியில் இரண்டாம் சுற்று வரை இருந்தவர். இவரது தாயார் உமா பெர்ணான்டஸ் தமிழ்க குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். தமிழ்நாட்டை சேர்ந்த உமா 1960களில் இங்கிலாந்தில் குடியேறினார். பின்னர் உமா இங்கிலாந்தில் குடியேறிய கென்யாவை சேர்ந்த கிரிஸ்டி பெர்னாண்டஸ் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் சுயெல்லா.