ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி 6 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வரும் ஹாங்காங்கில் முதன்முறையாக சீன ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் திட்டத்துக்கு எதிராக மக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது. எனினும் ஹாங்காங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என கூறி ஹாங்காங் மக்கள் போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். 6 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் முதன்முறையாக அங்கு சீன ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் ஏற்படுத்தி இருந்த சாலை தடுப்புகளை நீக்கும் பணிகளில் சீன ராணுவத்தினர் ஈடுபட்டனர்.
ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே உணவு சமைத்து, பெட்ரோல் குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரித்து தங்களின் கல்விக்கூடத்தை பாதுகாப்புமிக்க பகுதியாக மாற்றியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.