தங்கள் எல்லைப்பகுதியான தோகலாமில் இந்திய படைகள் குவிப்பு விவகாரம் தீவிரமடைந்திருப்பதாக சீனா கூறியுள்ளது. இவ்விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது இந்தியாதான் என்றும் இந்தியாவுக்கான சீன தூதர் லு ஜாகோய் தெரிவித்துள்ளார்.
சீன எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இந்தியப் படைகள் தங்கள் நிலையிலிருந்து நிபந்தனையின்றி பின் வாங்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை என்ற நிலைப்பாட்டில் தாங்கள் உறுதியாக உள்ளதாகவும் அவர் சீன தூதர் கூறினார். தோக்லாம் பிரச்னையை சரியாக கையாளாவிடில் அது போருக்கு இட்டுச் செல்ல நேரிடும் என்ற சீன அரசு ஊடகத்தின் கருத்து குறித்த கேள்விக்கு அந்நாட்டு தூதர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியா, பூடான், சீன எல்லைப் பகுதியில் உள்ள தோகலாம் என்ற இடத்தில் சீனா சாலை அமைத்து வருகிறது. இதை தடுக்கும் நோக்கில் இந்திய படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. 19 நாட்களாக இந்திய படைகள் அங்குள்ள நிலையில் பதற்ற நிலை நீடித்து வருகிறது.