உலகம்

அது குப்பைத் தகவல் - உபெருடன் இணைவதாக வெளியான தகவலுக்கு ஓலா சிஇஓ காட்டமான பதில்!

ச. முத்துகிருஷ்ணன்

வாடகை கார் சேவையை வழங்குவதில் முன்னணியில் திகழும் ஓலாவும் உபரும் இணைவதாக வெளியான தகவலுக்கு “அது ஒரு குப்பைத் தகவல்” என்று ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் காட்டமாக பதிலளித்துள்ளார்.

ஓலா மற்றும் உபர் ஆகிய நிறுவனங்கள் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. ஓலா தலைமை நிர்வாகி பவிஷ் அகர்வால் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உபர் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தவறான தகவல் என்றும், ஓலாவுடன் இணைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை எனவும் உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் மறுப்பு தெரிவித்துள்ள ஓலா, இது தேவையற்றது என்றும், தங்கள் நிறுவனம் நன்றாக வளர்ந்து வருவதாகவும் கூறியுள்ளது.

தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் “அது ஒரு குப்பைத் தகவல். நாங்கள் மிகவும் லாபகரமாகவும் நன்றாகவும் வளர்ந்து வருகிறோம். வேறு சில நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து தங்கள் வணிகத்தை வெளியேற்ற விரும்பினால், அவர்களை நாங்கள் வரவேற்போம்! ஆனால் நாங்கள் ஒருபோதும் எங்கள் நிறுவனத்தை வேறு நிறுவனத்துடன் ஒன்றிணைக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் உபர், தனது உணவு விநியோக நிறுவனமான உபர் ஈட்ஸை ஸோமேட்டோவுக்கு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் Ola தனது மளிகை விநியோக வணிகத்தை இழுத்து மூடியதும் குறிப்பிடத்தக்கது.