உலகம்

இந்திய விமானி என நினைத்து பாக். விமானியை அடித்துக்கொன்ற கும்பல்!

இந்திய விமானி என நினைத்து பாக். விமானியை அடித்துக்கொன்ற கும்பல்!

webteam

இந்திய விமானி என நினைத்து பாகிஸ்தான் விமானியை, ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த கும்பல் ஒன்று அடித்துக் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

புல்வாமாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாயினர். இந்தக் கொடூர தற்கொலைத் தாக்கு தலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியது. இதைத் தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டுகளை வீசி அழித்தது. இதில் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இந்தியாவுக்குள் கடந்த 27 ஆம் தேதி பாகிஸ்தான் போர் விமானம் ஊடுருவ முயன்றது. அதை இந்திய விமானப் படை  விரட்டியது. அப்போது அவர்களின் எப் 16 ரக ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்திய தரப்பில் இருந்து விரட்டி சென்ற விமானம் ஒன்று ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்தது. இதில் விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கினார். இதன்பின் சர்வதேச அழுத்தம் காரணமாக அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந் நிலையில், பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட, லண்டன் வழக்கறிஞர் காலித் உமர் என்பவர் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின், எப் 16 ரக ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதும் அது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்துள்ளது. அதில் இருந்த ஷாஜாஸ் உட் தின் என்ற விமானி பாராசூட் மூலம் குதித்துள்ளார். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்த அவர் பலத்த காயமடைந்திருந்தார். 

அவரை இந்திய விமானப்படை வீரர் என நினைத்து அங்கு கூடியிருந்த கும்பல் அடித்து தாக்கியுள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார் என காலித் தெரிவித்துள்ளார்.

(அபிநந்தன்)

கடந்த 27 ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவமும், 2 இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்றும் 2 விமானிகள் சிறை பிடிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தது. பின்னர் பிடிபட்டது ஒரு விமானிதான் என்று தெரிவித்தது. ‘’இது பாகிஸ்தானில் இருந்து கிடைத்த மீடியா செய்திகள் மற்றும் வீடியோவின் அடிப்படையில் நான் தெரிந்துகொண்டது. பின்னர் அந்த வீடியோ நீக்கப்பட்டுவிட்டது’’ என்று அவர் காலித் தெரிவித்துள்ளார். 

அபிநந்தனை போல இந்த விமானியின் தந்தையும் பாகிஸ்தான் விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றியவர்.