ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் தங்கள் நாட்டில் தான் இருக்கிறார் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரெஷி உறுதிப்படுத்திள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருந்த ஜெய்ஷ்-இ-முகமது முகாம்கள் குண்டு வீசி அழித்தது. இதையடுத்து இந்திய-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. இதில் பாகிஸ்தானின் எஃப்16 ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேசமயம் இந்திய விமானி அபிநந்தன் சென்ற விமானம் தொடர்பு துண்டாகி, அவர் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டார். அங்கு சிறைக்கைதியாக உள்ள அவர், இன்று விடுதலை செய்யப்படுகிறார்.
இந்நிலையில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் தங்கள் நாட்டில் தான் உள்ளார் என்பதை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மசூத் குரேஷி உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் மசூத் அசார் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அதனால் அவர் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மசூத் அசாருக்கு எதிராக இந்திய ராணுவம் ஆதாரங்களை அளித்தால், அதனை பரிசீலித்து அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளார். மேலும், அசாருக்கு எதிராக குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவரை நீதிமன்றத்தின் ஆஜார் படுத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தானிடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், சூமூக நிலை ஏற்படுவதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய விமானி அபிநந்தனை விடுக்க உத்தரவிட்டதாகவும் குரேஷி குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையிட்டு, இரு நாடுகளையும் அமைதி வழியில் பேச்சுவார்த்தை நடத்த கூறியது வரவேற்கத்தக்க ஒன்று என அவர் பாராட்டியுள்ளார். மேலும், அமெரிக்கா-பாகிஸ்தான் இடையே சுமூகமான உறவு இருப்பதால், அமெரிக்காவின் கருத்தை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.