உலகம்

“இந்தியா சென்று வந்ததில் இருந்து கை குலுக்குவதற்கு பதில் வணக்கம் தெரிவிக்கிறேன்”- ட்ரம்ப்

webteam


அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கருடனான சந்திப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய முறைப்படி வணக்கம் வைத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொரோனா உலக நாடுகளை கடும் அச்சத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் பாதிப்பு படிப்படியாக இத்தாலி, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியது. கொரோனா பாதிப்பிற்கு உலக அளவில் இதுவரை 5000-க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவை பொருத்தவரை தற்போது கொரோனா பாதிப்பிற்கு 38 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 1,135 கொரோனா தொற்று இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் கொரோனா பரவமால் இருக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கருடனனான சந்திப்பில் கை குலுக்காமல் இந்திய முறைப்படி கைகளால் வணக்கம் செய்தது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் மற்றும் ட்ரம்ப் ஆகியோரின் சந்திப்பு அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது கொரோனா‌ அச்சுறுத்தல்‌ காரணமாக இருவரும் கை குலுக்கவில்லை. மாறாக இந்திய முறைப்படி வணக்கம் வைத்தனர். இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது “ நாங்கள் இருவரும் கை குலுக்கவில்லை. அந்த நேரத்தில் எங்களுக்குள் ஒரு வித்தியாசமான உணர்வு இருந்தது. நான் சமீபத்தில்தான் இந்தியா சென்று வந்தேன். அங்குதான் வணக்கம் வைக்கும் முறையை கற்றுக்கொண்டேன். அது மிகவும் எளிதாக இருக்கிறது. இந்திய சுற்றுப் பயணத்திற்கு பிறகு கை குலுக்‌குவதற்கு பதிலாக கை கூப்பி வணங்குவதை பின்பற்றுகிறேன்” என்று கூறியுள்ளார்.