சீனாவில் வசிக்கும் 81 வயது வாங் டேஷன், விளம்பரங்கள், ஃபேஷன் ஷோக்கள், திரைப்படங்கள் என்று சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். சீனாவின் ‘ஹாட்டஸ்ட் கிரான்ட்பா’ என்று அழைக்கப்படும் இவர், முதியவர்களின் பார்வையையும் மாற்றியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை சாதாரண மனிதராகத்தான் வாங் வாழ்க்கை நடத்தி வந்தார். திடீரென்று ஒரு ஃபேஷன் டிசைனரிடமிருந்து வாங் டேஷனின் மகள் மூலம் அழைப்பு வந்தது. வெண் தாடி, நீளமான தலைமுடியுடன் சட்டை அணியாமல் சில நிமிடங்கள் மாடல்கள் சூழ ஃபேஷன் ஷோவில் நடந்து வந்தார். ஒரே இரவில் சீனாவின் சூப்பர் ஸ்டாராக மாறினார். இவர் என்ன சாப்பிடுகிறார், உடலைக் கட்டுக்கோப்பாக எப்படி வைத்துக் கொள்கிறார் என்றெல்லாம் தெரிந்துகொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டினர். “முதல்முறை சட்டையின்றி ஃபேஷன் ஷோவில் நடந்தபோது ஆபாசமாக வலம் வந்த குற்றத்துக்காக கைது செய்யப்படுவோம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அதற்கு நேர்மாறாக, விளம்பரங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களில் வாய்ப்புகள் வந்து குவிந்துவிட்டன. சட்டென்று மக்கள் என்னை ஒரு பிரபலமாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். சீனா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அறியக் கூடிய மனிதராக மாறிவிட்டேன். சீனாவின் ‘ஹாட்டஸ்ட் கிரான்ட்பா’ பட்டமும் பெற்றுவிட்டேன். புகழும், பணமும் பெருகிவிட்டது ஆனால் என் வாழ்க்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதேபோல்தான் இப்போது உள்ளது. ஒரு கிண்ணம் சோறும், கொஞ்சம் டோஃபுவும் தான் என் உணவு. இயற்கை நம் வயதைத் தீர்மானிக்கிறது. நீங்கள்தான் மனநிலையைத் தீர்மானிக்கிறீர்கள். நல்ல சிந்தனையாலும், செயல்களாலும் இளமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். இறப்பைத் தவிர்க்க இயலாது. இறந்த பிறகு என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அமைதியாகவும், சந்தோஷமாகவும், பயனுள்ளதாகவும் வாழ்கிறேன். இறந்த பிறகு என் உடலை மருத்துவப் பயன்பாட்டுக்கு எழுதி வைத்துவிட்டேன்” என்கிறார் வாங் டேஷன்.