Kohli
Kohli  RCB twitter page
Cricket

'பைத்தியம் மாதிரி இருந்தேன்; என்னை மாற்றியதே இவர்தான்' - விராட் கோலி உருக்கம்

Justindurai S

2022 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு இந்திய அணியில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக விராட் கோலி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் தற்போதுவரை 3 அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும் அதிக ரன் எடுத்தவர்களின் பட்டியலில் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் 2022 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக ஃபார்ம் இன்றி தவித்து வந்த சோதனையான காலக்கட்டத்தை குறித்து மனம் திறந்துள்ளார் விராட் கோலி.

Virat Kohli

ஜியோ சினிமாவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் விராட் கோலி கூறுகையில், ''ஆசியக் கோப்பைக்கு முன்பு வரை நான் சரியாக கிரிக்கெட் விளையாடவில்லை. தொடர்ந்து ஆட்டம் இழந்து வந்தேன். இதனால் ஆசியக் கோப்பை தொடரில் விளையாடும் போது இதுதான் நான் சர்வதேச கிரிக்கெட் விளையாடப் போகும் கடைசி நாட்களாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் 71-வது சதம் அடித்த பிறகு அனைத்தும் மாறிவிட்டது. இந்த ஒரு சதத்திற்காகவா நான் ஒன்றரை ஆண்டுகளாக பாடுபட்டேன் என்ற நினைக்க தோன்றியது.

சதம் வந்த உடன் அனைத்து எண்ணங்களும் ஒரு நொடியில் போய்விட்டது. அவ்வளவுதான் இதற்காக நான் பைத்தியக்காரத்தனமாக இருந்தேன் என்று என்னையே நான் திட்டிக் கொண்டேன்.

என் மனைவி அனுஷ்கா சர்மாவிடம் நான் உரையாடுவது விலை மதிப்பற்றது. நான் என்ன தவறு செய்கிறேன் என்பதை என் முகத்துக்கு நேராக உண்மையை சொல்லி விடுவார். அவர் மட்டும் என் அருகில் இல்லை என்றால் நான் ஆசிய கோப்பைக்கு முன்பெல்லாம் பைத்தியக்காரனாக தான் இருந்திருப்பேன். அவர்தான் என்னை மனிதராக்கினார்'' என்றார்.