வீடியோ ஸ்டோரி

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் - தென் கிழக்காசிய நாடுகள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

கலிலுல்லா

தென் ஆப்ரிக்காவில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், தென்கிழக்காசிய நாடுகள் விழிப்புடன் இருக்கவேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கடந்த 10ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 200க்கும் அதிகமாக இருந்த நிலையில் 15 நாட்களில் அந்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 800ஆக அதிகரித்தது. திடீரென கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன என்று ஆய்வு செய்த தென் ஆப்ரிக்க தொற்றுநோய் நிபுணர்கள், கொரோனா வைரஸின் மரபணுவில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதைக் கண்டு உலக நாடுகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அவசர ஆலோசனை கூட்டம் நடத்திய உலக சுகாதார அமைப்பு இந்த திரிபுக்கு ’’ஒமைக்ரான்’’ எனப் பெயரிட்டு, மிகக் கவலை அளிக்கும் திரிபு என வரையறுத்தது.

தற்போதுவரை தென் ஆப்ரிக்கா, ஹாங்காங், நெதர்லாந்து, போட்ஸ்வானா, பெல்ஜியம், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், தாய்லாந்து, ஈரான், பிரேசில், கனடா, ஆகிய நாடுகள் பயணத்தடை அறிவித்துள்ளன. ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அமெரிக்காவில் இவ்வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாலும், நியூயார்க் மேயர் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

மனித உடலில் உள்ள செல்களோடு இணையும் ஸ்பைக் புரோட்டீனில் பெருமளவு மாற்றம் அடைந்திருப்பதால், ஒமைக்ரான் கொரோனா வைரஸ் ஏற்கெனவே தொற்றுக்கு ஆளானவர்களையும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களையும்கூட எளிதில் தாக்குகிறது. எனவே தென் கிழக்காசிய நாடுகள் கூடுதல் விழிப்புடன் செயல்பட்டு புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்கவேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இயக்குநர் பூனம் சிங் அறிவுறுத்தியுள்ளார். பெருந்தொற்று முடிந்துவிட்டது என்ற மனநிலைக்கு வந்து அலட்சியமாக செயல்படக் கூடாது என்பதற்கு புதிய கொரோனா திரிபே உதாரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.