இம்மாதத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இதனை எதிர்கொள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளை தூர்வாருதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி துரிதப்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு அதிக மழை தரும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் தலைநகர் சென்னையில் மழைநீர் வடிகால்கள், நீர்நிலைகளில் தண்ணீர் முறையாக சென்றாலே பல பிரச்னைகளை தீர்த்து விடலாம். இந்த நோக்கத்தில், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, 14 மண்டலங்களில் 2,686 சாலைகளில் மழைநீர் வழிந்தோடும் வகையில் மொத்தம் 30,797 வண்டல் வடிகட்டி தொட்டிகளை தூர்வர மாநகராட்சி நிர்வாகம் திட்டமிடப்பட்டிருந்தது. அக்டோபர் 4 ஆம் தேதி நிலவரப்படி அதில் 28,024 வண்டல் வடிகட்டி தொட்டிகள் தூர்வாரப்பட்டுள்ளன.
அதேபோல 12 மண்டலங்களில் 696.66 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்களை தூர்வார திட்டமிடப்பட்டிருந்தது. அக்டோபர் 4 ஆம் தேதி நிலவரப்படி அதில் 660.29 கிலோமீட்டர் தூர்வாரப்பட்டு விட்டது. நீர் தேங்கும் இடங்களில் அதனை வெளியேற்ற 570 மோட்டார்கள் மற்றும் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீவிர மழையால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தால் அவற்றை அப்புறப்படுத்த 360 மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளன. இது ஒருபுறம் இருக்க. திருமண மண்டபங்கள், பள்ளிகள் உட்பட 169 நிவாரண மையங்களையும் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ளது.
பருவமழைக் காலங்களில் நன்னீர் தேங்குவதால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால், அதனை கட்டுப்படுத்தவும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 100 பேரும் செப்டம்பர் மாதம் 129 பேரும் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் மாதத்தில் 4 ஆம் தேதி வரை மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பரவல் பற்றிய விழிப்புணர்வை மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஏற்படுத்த 3589 மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநகராட்சியின் முன்னெடுப்புகளோடு மக்களின் ஒத்துழைப்பும் இருந்தால், பருவமழை காலத்தையும் பெரிய பாதிப்புகள் இல்லாமல் கடக்க முடியும்.