வீடியோ ஸ்டோரி

கிராமப்புற இளைஞர்களை தடம் புரளச் செய்யும் ஆடு திருட்டு: கவனம் காட்டுமா காவல்துறை?

நிவேதா ஜெகராஜா

திருட்டு என்ற பார்வையில் மட்டும் கருதப்பட்டு வந்த ஆடு திருட்டு, கொலைக்கும் அஞ்சாத கொள்ளையாகவும் மாறியுள்ளதென்பதை சமீபத்திய சிறப்பு காவல் ஆய்வாளரின் மரணம் நமக்கு உணர்த்தியிருந்தது. இதனாலேயே, “கிராமப்புற இளைஞர்களை தடம் புரளச் செய்யும் ஆடு திருட்டை ஒழிக்க, மிக தீவிரமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே ஆடு திருட்டுகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இதைக்குறிப்பிடும் கால்நடை வளர்ப்போர், “ஆடுகளையும் மாடுகளையும் வளர்ப்பது எளிதல்ல. பிள்ளைகளைப் போல அவற்றை கண்ணுக்கு கண்ணாக பார்த்து பராமரிக்க வேண்டும். அவை அபகரிக்கப்படும்போது உயிரே போய்விடும்” என்கிறார்கள் அவர்கள்.

இரவு நேரத்தில் ஆட்டுப்பட்டியில் புகுந்து திருடுவதெல்லாம் அந்தக் காலம். பட்டப்பகலில் இருசக்கர வாகனத்திலோ காரிலோ கிராமச் சாலைகளில் நோட்டம் விட்டுக்கொண்டே சென்று, மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை போகிற போக்கிலேயே தூக்கிச் செல்வதுதான் தற்காலத் திருட்டு என வேதனை தெரிவிக்கும் அவர்கள், அப்படி களவாடப்படும் ஆடுகள் யாவும் மலிவான விலைக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கிறார்கள். “ரூ. 10,000 - ரூ. 15,000 மதிப்புள்ள ஆடுகளை வெறும் ரூ.2,000 - ரூ.3,000 க்கு விற்கின்றனர் ஆடு திருடர்கள்” என வேதனை தெரிவிக்கின்றனர்.

கொரோனா காலத்தில் அதிகரித்த வேலையிழப்பு, படித்து விட்டு வேலை கிடைக்காத நிலையை பயன்படுத்தி ஆடம்பர வாழ்க்கைக்கு செய்யப்படும் உபதேசங்களே இளைஞர்களை ஆடு திருடர்களாக உருமாற்றுவதாக கூறுகின்றனர் கால்நடை வளர்ப்போர். ஆடுகள் அபகரிக்கப்பட்டது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தாலும், ‘அவ்வழக்குகள் பெரும்பாலும் கிடப்பிலேயே போடப்படும், அப்படியே திருடர்கள் கிடைத்தாலும் காவல் நிலையத்திலேயே சமாதானம் பேசுவார்கள்’ என்கின்றனர் கால்நடைகளை வளர்ப்பவர்கள். இந்த நிலை காரணமாக, சிறார்களும் ஆடு களவாணிகளாக மாறியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். களவாணிகள் இப்போது காவல்துறையினரின் உயிரைப்பறிக்கும் கொலைகாரர்களாகவும் ஆகியுள்ளனர் என தெரிகையில்தான் விஷயம் பூதாகரமாகியுள்ளது. இந்த நிலையை மாற்ற, பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் காணப்படும் மாற்றங்களை கூர்நோக்கி திருத்த வேண்டும் என்கிறது காவல்துறை.

ஆடு திருடினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் இல்லாததால் தமிழ்நாடு முழுவதுமே ஆடு திருட்டு என்பது குற்றமே இல்லை என்ற பார்வை காணப்படுகிறது. விரைந்து காவல்துறையும் அரசும் இதில் தீவிரம் காட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் இருக்கிறது.