வீடியோ ஸ்டோரி

ஐந்தருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்

Sinekadhara

கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஐந்தருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

நெல்லை மாவட்டம் பழவூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் புகுந்த நிலையில் கிராமப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. வள்ளியூர், ராதாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் கொடுமுடியாறு நீர்த்தேக்கம் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திற்கு உட்பட்ட 44 குளங்களில் 22 குளங்கள் நிரம்பி உள்ளன. வள்ளியூரில் உள்ள நரிக்குறவர் காலனிக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் அங்கு வசித்தவர்கள் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர் கனமழை காரணமாக குத்திரபாஞ்சான் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பணகுடி அனுமன் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பணகுடி பிரதான சாலையில் உள்ள பாலத்தை தொட்டவாறு தண்ணீர் செல்கிறது. தாம்போதி பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.