வீடியோ ஸ்டோரி

சென்னையில் தேங்கியிருக்கும் மழைநீர்: உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் படகுமூலம் மீட்பு

சென்னையில் தேங்கியிருக்கும் மழைநீர்: உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் படகுமூலம் மீட்பு

Sinekadhara

சென்னையில் மழை ஓய்ந்த பிறகும் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். அவசர தேவைக்குக்கூட வெளியே செல்ல முடியாமல் தவித்து வருவதாக மக்கள் தெரிவித்தனர். 

ஜவகர் நகரில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதியில் ஆம்புலன்ஸ்கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து படகில் சென்ற மீட்புப்படையினர் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை எம்.எம்.டி.ஏ பகுதி 100 அடி சாலையில் தேங்கியிருந்த மழைநீரின் அளவு குறைந்துள்ளது. அதே நேரத்தில் கடைகளுக்கு உள்ளேயும் மழைநீர் சென்றதால் பொருட்கள் வீணாகியிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பட்டாளம் பகுதிக்கு செல்லக்கூடிய இடத்தில், இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. வீடுகளைவிட்டுக்கூட வெளியே வரமுடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். ‌‌‌‌‌‌

சென்னை கீழ்ப்பாக்கம் காவலர்கள் குடியிருப்பில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 400க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்திருப்பதால் அங்குள்ள மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். பெருங்குடி ரயில் நிலையத்தை ஒட்டிய உதயம் நகர் பகுதிக்கு உட்பட்ட ஏழு தெருக்களில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கியுள்ளது.