வீடியோ ஸ்டோரி

திருப்பதி: போலி தரிசன டிக்கெட் வழங்கி மோசடி; இடைத்தரகர்கள் 2 பேர் கைது

Veeramani

திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்காக போலி டிக்கெட் தயாரித்து 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த இடைத்தரகர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஏழுமலையானை தரிசிக்க மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 14 பக்தர்கள் திருப்பதி வந்துள்ளனர். அவர்களை அணுகிய புதுச்சேரியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், சித்தூரை சேர்ந்த வேணுகோபால் என்ற இருவர், 300 ரூபாய் தரிசன டிக்கெட் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். மேலும் தரிசன டிக்கெட் ஒன்றுக்கு கூடுதலாக 600 ரூபாய் தர வேண்டும் என பக்தர்களிடம் பேசி மொத்தமாக 12,600 ரூபாய் வசூலித்துள்ளனர்.

பின்னர் தரிசனம் செய்வதற்காக போலி டிக்கெட்டுகளையும் அவர்களிடம் வழங்கியுள்ளனர். அதை பெற்றுக் கொண்டு தரிசனத்திற்கு சென்றபோது அவை போலியாக தயாரிக்கப்பட்டவை என தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மகாராஷ்டிரா பக்தர்கள் அலிபிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பக்தர்களை ஏமாற்றிய இரு இடைத்தரகர்களையும் கைது செய்தனர்.