வீடியோ ஸ்டோரி

தொடர் மழை எதிரொலி - கிடுகிடுவென உயரும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை

தொடர் மழை எதிரொலி - கிடுகிடுவென உயரும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை

கலிலுல்லா

தொடர் மழை எதிரொலியாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் அதன் விலை விறுவிறுவென உயர்ந்து வருகிறது. சென்னையில் சில்லறை விற்பனை விலையில் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதே போல தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறிச் சந்தைகளில் ஒன்றான திருச்சி காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை தரத்தை பொறுத்து சில்லறை விற்பனையில் கிலோ 60 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனையாகிறது. வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் தக்காளி விலை சில்லறை விற்பனையில் கிலோ 80 ரூபாய் வரை விற்பனையாகிறது. விளைச்சல் குறைவு என்பதாலும் முகூர்த்த நாள் என்பதாலும் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி மட்டுமல்லாமல் பிற காய்கறிகளும் விலை உயர்ந்துவிட்டதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்

கோவையை சுற்றியுள்ள மதுக்கரை, செம்மேடு, ஆலாந்துறை பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் தக்காளி செடிகள் நாசமானதால் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. கர்நாடகாவிலிருந்து வரும் தக்காளி மட்டுமே கோவை கடைகளில் தற்போது விற்பனையாகிறது. அவையும் கிலோ 60 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மழை தொடர்ந்தால் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளதாலும், விளைச்சல் குறைந்துள்ளதாலும் தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. திருச்சி காந்தி மார்க்கெட்டைப் பொறுத்தவரை திருச்சி மாவட்டத்தின் வையம்பட்டி மற்றும் பிற மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது.

மொத்த விற்பனையில் கிரேடு 1 தக்காளி கிலோ ஒன்றுக்கு 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இரண்டாம் ரக தக்காளி கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.மொத்த விற்பனையில் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக, சில்லரை விற்பனையில் தக்காளியின் விலை கடும் விலை உயர்வை சந்தித்துள்ளது.

கடந்த வாரங்களில் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த தக்காளி, தற்போது சில்லரை விலையில் ஒரு கிலோவிற்கு 60 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழை பாதிப்பு குறைந்து, வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.