சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை கடந்த வாரத்தை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலையும் உயர்ந்திருப்பதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை - கோயம்பேடு காய்கறிச் சந்தை, ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையாகும். மொத்த விலை விற்பனை நடைபெறும் இங்கு, சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிராவிலிருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன. இவற்றில் கடந்த வாரம் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையான தக்காளியின் விலை தற்போது 3 மடங்கு அதிகரித்துள்ளது. பெங்களூர் தக்காளியின் விலை ஒரு கிலோ 70 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கோயம்பேடு சந்தைக்கு ஒரு நாளில் 60 முதல் 70 லோடு வரை தக்காளி வரும். தற்போது தக்காளி அதிகபட்சம் 40 லோடு மட்டுமே வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் பெய்த மழையால் வரத்து குறைந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே தக்காளி விலை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர். இந்த விலை உயர்வு தற்காலிகம்தான் என்றும் அவர்கள் கணிக்கின்றனர்.
கோயம்பேடு காய்கறிச் சந்தையில் தக்காளியைப் போலவே, வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் கிலோ 30 ரூபாய் என விற்பனையான ஒரு கிலோ வெங்காயம், இப்போது 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தக்காளி, வெங்காயம் விலை உயர்வால் செலவு அதிகரிப்பதாக இல்லத்தரசிகள் தெரிவிக்கின்றனர்.