வீடியோ ஸ்டோரி

நீலகிரி: அடர்ந்த புதருக்குள் சென்று பதுங்கிக் கொண்ட புலி - 3வது நாளாக தொடரும் தேடும் பணி

நிவேதா ஜெகராஜா

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வனத்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்ட புலியொன்று, மயக்க ஊசி செலுத்துவதற்கு முன் தேயிலைத் தோட்டம் வழியாக தப்பிச் சென்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை, தேவன் எஸ்டேட் பகுதியில் புலியொன்றின் நடமாட்டத்தை நேரில் பார்த்ததாக மக்கள் கூறியதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை தொடங்கியது. இதற்காக 10 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 4 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன. மரங்களின் மீது பரண்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வந்தனர். ஏற்கெனவே இருவர் அந்தப் புலியால் கொல்லப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மாடு மேய்த்து கொண்டிருந்த சந்திரன் என்பவர் புலியின் தாக்குதலுக்கு இரையானர்.

இந்நிலையில் நேற்று மாலை நீலகிரியில் தேவன் எஸ்டேட் பகுதியில் இருந்து மேல்பீல்டு பகுதிக்கு சென்ற அந்தப் புலி, வழியில் இரண்டு மாடுகளை அடுத்தடுத்து கொன்றது. இத்தகவல் அறிந்த வனத்துறையினர், உயிரிழந்த ஒரு மாட்டின் உடலை நேற்று இரவு கண்டறிந்து, இறந்த அந்த ஒரு மாட்டின் அருகே புலியை பிடிக்கும் நோக்கில் கூண்டு ஒன்றை வைத்திருக்கிறார்கள். அக்கூண்டிற்குள் வன கால்நடை மருத்துவர் மயக்க ஊசி செலுத்த துப்பாக்கியோடு காத்திருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக புலி இரண்டாவது மாட்டை இரவு தின்று இருக்கிறது. இதனால் புலியை பிடிக்கும் பணி முழுமையடையவில்லை.

இதைத்தொடர்ந்து கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் 7-க்கும் மேற்பட்ட புலிகளை, கூண்டு வைத்து வெற்றிகரமாக பிடித்த பயிற்சி பெற்ற வனத்துறை பணியாளர்கள் கூடலூர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கூடலூர் வனத்துறையினரோடு இணைந்து புலி இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளனர். இன்று காலை அங்கு சென்றிருந்த அவர்களுக்கு, மேல்பீல்டு பகுதியில் மாடு உயிரிழந்து கிடந்த பகுதிக்கு அருகே உள்ள சிறிய புதரில் புலி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக பாதுகாப்பு உடைகளை அணிந்து, புலி இருக்கும் பகுதியை சுற்றி வளைத்தனர். பட்டாசு வெடித்து புலியை வெளியே வர வைத்து அதற்கு மயக்க ஊசி செலுத்துவதற்காக வன கால்நடை மருத்துவ குழுவினரும் மீண்டுமொரு முறை தயார் நிலையில் இருந்துள்ளனர்.

புலியின் நடமாட்டம் ட்ரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வனத்துறையினர் சுற்றி வளைத்ததை உணர்ந்த புலி, அங்கிருந்து தப்பித்தது. தப்பித்த புலி தேயிலை செடிகளுக்கு இடையே நடந்து சென்றதை காண முடிந்தது. வனத்துறையினர் பல குழுக்களாக பிரிந்து தப்பிய புலியை விரட்டி மயக்க ஊசி செலுத்த முயன்றனர். ஆனால் புலி அடர்ந்த புதருக்குள் சென்று மறைந்தது.

இதனால் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணிகள் மீண்டும் 3வது நாளாக தொடர்கிறது. தப்பித்த புலி மீண்டும் தேவன் எஸ்டேட் பகுதியை நோக்கி வருவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்கள். புலி நடமாட்டம் காரணமாக நூற்றுக்கணக்கான தேயிலை தோட்ட பணியாளர்கள் பணிக்குச் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.