காஞ்சிபுரம் மாவட்டத்தில் கையில் பட்டாக் கத்தியுடன் வெவ்வேறு பகுதிகளில் ரவுடிகள் கடைகளை சூறையாடியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இரண்டு மணி நேரத்திற்குள், நான்கு பேரை அரிவாளால் வெட்டியுள்ளனர். தனிகா, தினேஷ் ஆகிய ரவுடிகள் இடையே தொழில் போட்டி இருந்து வருவதால், ஒருவருக்கொருவர் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் ஸ்ரீராம் என்பவரிடம் ரவுடிகள் பணம் கேட்டு மிரட்டிய நிலையில், அவர் பணம் தராததால், அவரது கடையை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். மேலும் சாலைத்தெருவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இந்த சம்பவங்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதனிடையே வெவ்வேறு பகுதிகளில் நான்கு பேரை, ரவுடிகள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி ஸ்ரீதர் மறைவிற்குப் பிறகு, அவரைப் போலவே வலம் வர வேண்டும் என்பதற்காக தனிகா, தினேஷ் இடையே போட்டி நிலவுவதாகவும், இதனால் ஆங்காங்கே வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.