மனநலம் பாதிக்கப்பட்ட மூன்று மகன்களை தங்களது காலத்திற்கு பின் தாங்கள் போற்றும் கட்சி பார்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் அந்த இயக்கத்துக்கே சொத்துகள் அனைத்தையும் ஒரு தம்பதி எழுதிக் கொடுத்திருப்பது வியக்க வைத்துள்ளது.
கோவை மாவட்டம் கோட்டூர் பகுதியைச் சேர்ந்த துளசிதாஸ் (80) என்பவர், மின்வாரியத்தில் தினக்கூலியாக பணிக்குச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து இளம் மின்பொறியாளராக உயர்ந்து கடந்த 2001ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். தற்போது தொண்டாமுத்தூர் பகுதியில் வசித்துவரும் துளசிதாஸ் மலர்க்கொடி தம்பதிக்கு மூன்று மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ள நிலையில் 2 மகள்களுக்கும் மணமுடித்து கொடுத்துவிட்டார். இந்நிலையில், மனநிலை பாதிக்கப்பட்ட மூன்று மகன்களுடன் வசித்து வருகின்றனர்.
தங்கள் காலத்திற்குப் பிறகு தங்களது மகன்களை, தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கம் கவனித்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு, 15 லட்சம் ரூபாய் வங்கி வைப்புத்தொகை ஆகியவற்றை கட்சியின் பெயருக்கு எழுதிக் கொடுத்துவிட்டனர்.
இவ்வளவு காலமும் தாங்கள் மார்க்சிஸ்ட் இயக்கத்தினரோடு இரண்டறக் கலந்து வாழ்ந்து வந்ததாகவும் அவ்வியக்கத்திற்கே தங்களது சொத்து முழுவதையும் கொடுப்பதை பெருமிதமாகக் கருதுவதாகவும் துளசிதாஸின் மனைவி மலர்க்கொடி கூறினார்..
தங்களது சொத்துகளை கட்சி பெயருக்கு எழுதி வைத்துள்ள உயிலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன், உள்ளிட்ட தலைவர்களிடம் துளசிதாஸ் - மலர்க்கொடி தம்பதியினர் வழங்கினர். செங்கொடி இயக்கம் மீது நம்பிக்கை வைத்து தங்களது சொத்துகள் அனைத்தையும் கட்சியின் பெயருக்கு எழுதிக் கொடுத்திருக்கும் இத்தம்பதியின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.