வீடியோ ஸ்டோரி

தஞ்சை: கொடிக்கம்பம் அமைப்பதில் இருதரப்பினர் மோதல் - 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 20 பேர் காயம்

Veeramani

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கொடிக்கம்பம் அமைப்பது தொடர்பாக இரு தரப்பினர் கற்களை வீசி தாக்கிக்கொண்ட சம்பவத்தில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள், 4 காவலர்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் மண்ணி ஆற்று பாலத்தின் அருகே பொது இடத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் கொடிக்கம்பம் அமைப்பதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஞாயிறு மாலை இரு தரப்பினரையும் அழைத்து திருவிடைமருதூர் வட்டாட்சியர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை மண்ணி ஆற்றுப்பாலம் அருகே இருதரப்பினருக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கினர்.

இதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மெலட்டூர் காவல் உதவி ஆய்வாளர் சுகுணா மற்றும் கபிஸ்தலம் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் 4 காவலர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பத்து பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனையிலும், எஞ்சியவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த பகுதி முழுவதும் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.