கோவையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் விஜய் ஆனந்த், 11ஆம் வகுப்பு மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவது, புகைப்படம் அனுப்பக்கோரி வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆன்லைன் வகுப்பு நடந்தபோது மாணவிகளுக்கு தனியாக வீடியோ காலில் அழைப்பது, டி ஷர்ட் அணிந்துகொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துவது போன்ற செயல்களிலும் அந்த ஆசிரியர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியதாகவும், அவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இப்பிரச்னை குறித்து பேசியதாகவும் தெரிகிறது. ஆனால், ஆசிரியர் விஜய் ஆனந்த் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி, மாணவ - மாணவியர் பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, ஆசிரியர் விஜய் ஆனந்தை பணியிடை நீக்கம் செய்து முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
அந்த நகலை காண்பித்து, ஆர்ப்பாட்டத்தை கைவிடும்படி மாணவர்களிடம் பள்ளி நிர்வாகிகள் கேட்ட பின்னரும், ஆசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து, மாணாக்கர் கலைந்து சென்றனர்.