வீடியோ ஸ்டோரி

“அறிவியல் பூர்வமான முறையில் புலியை தேடுகிறோம்” : தலைமை வன உயிரின காப்பாளர் நீரஜ் பேட்டி

Veeramani

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் நான்கு பேரைக் கொன்ற T23 புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கும் பணிகள் 12 வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்த நிலையில் தமிழக தலைமை வன உயிரின காப்பாளர் சேகர் குமார் நீரஜ் செய்தியாளர்களை சந்தித்து நடைபெற்று வரும் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர், “T23 புலி ஆட்கொல்லி இல்லை என்பதை உறுதியாக தெரிவித்தார். புலியை பிடிக்கும் பணியில் தற்சமயம் புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டு அதன்படி பணிகள் நடந்து வருகிறது. புலி நடமாட்டம் உள்ள வனப்பகுதிக்குள் குறைந்த எண்ணிக்கையிலான வனத்துறை பணியாளர்கள் மட்டுமே புலியை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வனப்பகுதியை விட்டு தப்பிச் செல்லாமல் இருப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. எதிர்காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் புலி - மனித மோதல் நடைபெறாமல் இருப்பதற்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. பிரச்சினைகளுக்குரிய புலிகளை கண்டறிந்து அவற்றை தொடர்ச்சியாக கண்காணித்து அசம்பாவிதம் நடக்காத வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 

T23 புலி தற்சமயம் பதுங்கி உள்ள பகுதி புதர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அதனை கண்டறிந்து பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இருப்பினும் புலி நடமாட்டம் உள்ள பகுதியில் மரங்கள் மீது பரண் அமைத்து புலியை உயிருடன் பிடிப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

புலி பிடிக்கப்பட்ட பிறகு அதனை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா என்று எழுப்பிய கேள்விக்கு, புலி உயிருடன் பிடிக்கப்பட்ட பிறகு அதன் அடுத்த கட்டம் குறித்து கால்நடை மருத்துவர்கள் தான் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார். புலிக்கு பொருத்துவதற்காக டெல்லியிலிருந்து ரேடியோ காலர் கருவி  வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.