வீடியோ ஸ்டோரி

ரூ.600 கோடி நிதி மோசடி புகார்: ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது - 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

ரூ.600 கோடி நிதி மோசடி புகார்: ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது - 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

kaleelrahman

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி 600 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த புகாரில் ஹெலிகாப்டர் சகோதரர்களை தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களான எம்.ஆர்.சாமிநாதன், எம்.ஆர். கணேஷ். இவர்களுக்குச் சொந்தமாக பால்பண்ணை, நகைக்கடை, அடகுக்கடை, நிதி நிறுவனம் போன்றவை கும்பகோணம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றும் வைத்திருப்பதால், இவர்கள் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

வெளிநாடுகளிலும் தங்களுக்குச் சொந்தமாக நகைக்கடைகள், தங்கச் சுரங்கம் ஆகியவை இருப்பதாக இந்தச் சகோதரர்கள் கூறியதை நம்பி, கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த பலர் அவர்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

ஒரு லட்சம் கட்டினால், இரட்டிப்பாக இரண்டு லட்சமாக திருப்பி தரப்படும் என்ற ஆசைவார்த்தைகளை நம்பி, சமானியர்கள் முதல் செல்வந்தர்கள் வரை முதலீடு செய்த நிலையில், உறுதி அளித்தபடி பணம் கொடுக்காமல் மோசடி செய்ததாக ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக கும்பகோணத்தில் இந்த சகோதரர்களின் பண்ணை வீட்டிலிருந்து 13 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நிதி நிறுவன ஊழியர்கள் 5 பேரை கைது செய்த காவல் துறையினர், கணேசனின் மனைவியையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்ததினர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சாமிநாதன், கணேசன் ஆகிய இருவரையும் புதுக்கோட்டையில் உள்ள அவர்களது வழக்கறிஞரின் பண்ணைவீட்டில் வைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் 18 சூட்கேஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டு சகோதரர்களும் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர்களாகவும் தஞ்சை வடக்கு வர்த்தகப் பிரிவு செயலாளராகவும் இருந்தனர். இவர்கள் மீது புகார் எழுந்ததை அடுத்து வர்த்தகப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிபதி வீட்டில் சகோதர்களான சாமிநாதன், கணேஷ் ஆகிய இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதனைதொடர்ந்து, இருவரும் கும்பகோணம் கிளைச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.