விவசாயிகள் இறந்த விவகாரத்தை ராகுல் காந்தியும், காங்கிரசும் அரசியலாக்க முயற்சி செய்வதாகவும், லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் பாஜக பதிலளித்துள்ளது.
முன்னதாக, உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறைக்கு காரணமான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் கைது செய்யப்படாதது ஏன் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீதான வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை எனவும், விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு அகங்காரத்தின் காரணமாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தார். லக்கிம்பூர் செல்ல, உத்திரபிரதேச அரசு, தமக்கு விதித்த தடை உத்தரவு பொருந்தாது எனக்கூறிய ராகுல் காந்தி, உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க, லக்கிம்பூர் செல்லப்போவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்யாமல், நியாயம் கேட்பதாகவும், எதிர்கட்சிகளின் அழுத்தத்தால் தான் இந்த அளவிற்காவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார். ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் அரசு கட்டுப்படுத்துவதாக விமர்சனம் செய்த ராகுல்காந்தி, அரசியல் தலைவர்களை உத்தரப்பிரதேசத்தில் அனுமதிக்க மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். நேற்றைய தினம் லக்னோ சென்ற பிரதமர் நரேந்திர மோடி, லக்கிம்பூர் செல்லாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.