வீடியோ ஸ்டோரி

வொர்க் ஃபிரம் ஹோம் சாதகமா? சவாலா? - ஐ.டி. ஊழியரின் கொரோனா கால அனுபவம்

EllusamyKarthik

ஐடி நிறுவனங்களில் வேலை பார்ப்போர் கடந்த ஒராண்டுக்கும் மேலாக வீட்டிலிருந்தே வேலை செய்துவருகிறார்கள். அவர்களுக்கென்ன வீட்டிலேயே இருக்கிறார்கள் என்று நாம் நினைப்பதற்கு மாறாக இருக்கிறது அவர்களின் கருத்து. வொர்க் ஃபிரம் ஹோம் இவர்களுக்கு சாதகமாக உள்ளதா? சவாலாக உள்ளதா என்று பார்க்கலாம்.

நாள்பொழுதும் மடிக்கணினி. வீட்டின் தனி அறையில் தட்டச்சு உரையாடல்கள். பணி நேரம் முடிந்த பின்பும் டீம் லீடர் அழைத்தால் பணி செய்ய வேண்டும். இடையில் இணைய சேவை தடைபட்டால், அதற்கும் பொறுப்பேற்று அன்றைய டாஸ்க்களை முடிக்க வேண்டும். கடந்த 15 மாதங்களாக இவ்வாறு தான் நகர்கிறது சாப்ட்வேர் எஞ்சினியர்களின் வாழ்க்கை. அவர்களில் ஒருவர்தான் யுவராஜ். கடந்த 12 ஆண்டாக ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இவர், வொர்க் ஃபிரம் ஹோம் ஆரம்பத்தில் சிறப்பாக இருந்தாலும் நாள் செல்ல செல்ல அயர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.

யுவராஜ் மட்டுமல்ல, இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் 45 லட்சத்துக்கும் அதிகமானோர் சந்திக்கும் பிரச்சினை தான் இது. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவர்களிடம் யுனைட் அமைப்பு நடத்திய ஆய்வில், 67.9 % பேர் தங்களுக்கு நிறுவனங்கள் தரப்பில் இருந்து இணைய தளசேவைக்கட்டணம் மற்றும் மின்கட்டணம் தரப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். வீட்டிலிருந்து பணிபுரிய 62.4 % பெண்களும், 50% ஆண்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். 8 மணிநேரத்தைவிட அதிக நேரம் வேலை செய்வதாக 92.3% பேர் தெரிவித்துள்ளனர்.

அலைச்சல் கிடையாது, குடும்பத்துடன் இருக்கலாம், வீட்டு சூழல் போன்ற நல்ல விஷயங்கள் இருந்தாலும், பணிச்சுமை, மன அழுத்தம், வேலைஉறுதியின்மை, ஊதிய உயர்வின்மை போன்றவற்றை அச்சுறுத்தலாக கருதுகிறார்கள் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்.