வீடியோ ஸ்டோரி

கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்வதில் விலக்கு

கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்வதில் விலக்கு

Veeramani

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மத்திய அரசின் கீழ் பணியாற்றும் கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அலுவலகம் செல்வதில் விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் அறிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாவது அலை பரவலையடுத்து பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள விதிமுறைகள் குறித்து விளக்கியுள்ள மத்திய இணை அமைச்சர், கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வகையில் பணி நேரத்தில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

கட்டுப்பாட்டு மண்டல பகுதியை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் நீங்கும் வரை விலக்கு அளிக்கப்படுவதாகக் கூறிய மத்திய அமைச்சர், துணை செயலர்கள் அந்தஸ்துக்கு கீழ் உள்ள அரசு ஊழியர்களில் 50 விழுக்காடு நபர்கள் மட்டுமே பணிக்கு வர அறிவுறுத்தியதுடன், மற்றவர்கள் வீட்டில் இருந்து பணி செய்யுமாறு தெரிவித்துள்ளார். அலுவல் கூட்டங்கள் காணொலி மூலம் நடத்தப்பட வேண்டும் என்றும் தேவை இருந்தால் மட்டுமே பார்வையாளர்களுடனான சந்திப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பணியிடங்கள் சானிடைசர் தெளித்து தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகள் ஜனவரி 31 வரை அமலில் இருக்கும் என டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார். அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு, சூழ்நிலைக்கு ஏற்ப விதிமுறைகள் மாற்றியமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது