வீடியோ ஸ்டோரி

கல்லூரி மாணவர்களிடையே அதிகரிக்கும் மோதல் - வாட்ஸ்அப் குழு தொடங்கிய காவல்துறை

கலிலுல்லா

சென்னையில் கல்லூரி மாணவர்களிடையிலான மோதல்களைத் தடுக்க, காவல் துறையினர் கல்லூரிகளுக்கே நேரில் சென்று மாணவர்களுடன் உரையாடி அறிவுரை வழங்கினர். மாணவர்களிடையே மோதலை தூண்டி விடுபவர்களை கண்டறிய வாட்ஸ் அப் குழுவையும் காவல்துறையினர் அமைத்துள்ளனர்.

கல்லூரி திறந்த முதல் நாளே, சென்னை புறநகர் ரயிலில் பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் வெடித்தது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் விதிகளை மீறி ஊர்வலம் நடத்தியதாக 200பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பேருந்தில் தகராறில் ஈடுபட்டதாக, பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் 8 பேர் மீது டிபி சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இப்படி, பேருந்து தினம் கொண்டாட்டம், ரூட்டு தல போன்ற பெயர்களில் பேருந்துகளிலும், புறநகர் ரயில்களிலும் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொள்வது அதிகரித்து வருகிறது. இதற்கு முடிவு கட்ட, சென்னையில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த காவல் உயர் அதிகாரிகள், கல்லூரிகளுக்கு நேரடியாகக் சென்று மாணவர்களை சந்தித்து உரையாடும் முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.

கீழ்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியிலும் ராயப்பேட்டையில் புதுக்கல்லூரியிலும் நேரில் சென்ற காவல்துறை உயர் அதிகாரிகள், மாணவர்களுடன் உரையாடி, விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மோதலில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பன உள்ளிட்ட விளைவுகளை அவர்கள் எடுத்துரைத்தனர்.

இதனிடையே, பேருந்து கொண்டாட்டத்தில் சிக்கிய மாணவர்களை வைத்து 'வாட்ஸ் அப் குழு' ஒன்றை போலீசார் உருவாக்கியுள்ளனர். முதற்கட்டமாக பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் 50மாணவர்கள் இக்குழுவில் உள்ளனர். பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட மாணவர்களை தூண்டுபவர்கள் யார் போன்ற தகவல்கள் இதன் மூலம் அறிந்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த குழு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் வகையிலும் இக்குழு செயல்படும் எனக் கூறப்படுகிறது.