வீடியோ ஸ்டோரி

மதுரை: காவல்பணியோடு காளைகளை களமாடும் காவலர் - இது ஜல்லிக்கட்டு ஸ்பெஷல்!

கலிலுல்லா

ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு ஒவ்வொரு வாடிவாசலிலும் புதிய மாடுபிடிவீரரையும், அசாத்தியமாக நின்று விளையாடக்கூடிய காளைகளையும் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறது. பொங்கல் பண்டிகை நெருங்கும்நிலையில், மாடுபிடிவீரராக அறியப்படும் மதுரை காவலர் குறித்து தெரிந்துகொள்வோம்.

மதுரை மாநகர் புதூர் காவல்நிலையத்தில் 2-இம் நிலை காவலராக பணியாற்றுபவர் வினோத். வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த இவர் 14 ஆண்டுகளாக காவலராக பணியாற்றிவருகிறார். காவல்துறையில் பணியாற்றும் இவரின் இன்னொரு அடையாளம், ஜல்லிக்கட்டு வீரர் என்பதுதான். 1998-ஆம் ஆண்டு முதல் அலங்காநல்லூர் , அவனியாபுரம் , பாலமேடு மட்டுமின்றி, திண்டுக்கல் , தேனி , சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் இவர் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். ஏறு தழுவல் குறித்து எளிதாக விவரிக்கிறார் வினோத்.

2014-ல்அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை பிடித்து முதல்பரிசாக இருசக்கர வாகனத்தை வென்றவர் வினோத். 2018-ல் அதே அலங்காநல்லூரில் இரண்டாவது பரிசு வென்றார். அடுத்தடுத்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசுகளை குவித்துள்ள காவலர் வினோத், தனது மன அழுத்தத்தை குறைப்பதே ஜல்லிக்கட்டு காளைகள்தான் என்கிறார்.

ஆறு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்துவரும் காவலர் வினோத், மற்றவிளையாட்டுகளில் காவலர்கள் பங்கேற்றால் சிறப்பு அனுமதி கிடைப்பது போல, ஜல்லிக்கட்டில் பங்கேற்கவும் சிறப்பு அனுமதி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறார் காவலர் வினோத்.