செஞ்சி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தினார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவுக்கு உட்பட்ட பொண்ணங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி, ஆதிதிராவிடர் பிரிவு மகளிருக்கு ஒதுக்கப்பட்ட பதவியாகும். இந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டு, துத்திப்பட்டு மதுரா பகுதியைச் சேர்ந்த மக்கள் 13 லட்சத்துக்கு ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பொண்ணங்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த பலர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நமது புதிய தலைமுறையில் செய்தி வெளியானதையடுத்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், பொண்ணங்குப்பம் ஊராட்சிக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்பகுதி மக்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார்.