வீடியோ ஸ்டோரி

பட்டியலினத்தவர்கள் அமைச்சரானதை விரும்பாததால் எதிர்க்கட்சிகள் அமளி: பிரதமர் மோடி

பட்டியலினத்தவர்கள் அமைச்சரானதை விரும்பாததால் எதிர்க்கட்சிகள் அமளி: பிரதமர் மோடி

webteam

பட்டியலினத்தவர்களும் பெண்களும் அதிகளவில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்றும் எனவேதான் அவர்கள் அமளி செய்வதாகவும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் அண்மையில் பதவியேற்ற புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்து பிரதமர் பேச ஆரம்பித்தார். ஆனால், விலைவாசி உயர்வு, விவசாய சட்டங்கள் வாபஸ், தொலைபேசி ஒட்டுக்கேட்பு உள்ளிட்டவை பற்றி விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட ஆரம்பித்தனர். இதனால் பிரதமர் உரை தடைபட்டது.

தனது அமைச்சரவையில் பட்டியலின வகுப்பினர், விவசாயிகள், பெண்கள் பலர் இடம்பெற்றது எதிர்க்கட்சியினருக்கு பிடிக்கவில்லை என்றும் எனவேதான் அமளியில் ஈடுபடுகின்றனர் என்றும் பிரதமர் விமர்சித்தார். இதைத்தொடர்ந்தும் அமளி நிலவியதால் பிரதமர் தன் உரையை அறிக்கையாக தாக்கல் செய்வதாக கூறினார். இதன் பின் அவையை 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மாநிலங்களவை தொடங்கியதும் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து அலுவல்கள் தொடங்கியபோது புதிய அமைச்சர்களை பிரதமர் அறிமுகப்படுத்தினார். அப்போதும் கடும் அமளி நிலவியதால் பிரதமரின் பேச்சு தடைபட்டது. பதாகைகளை ஏந்தி அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிடவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முயற்சித்தனர்.