கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானை பாகுபலி தலைமறைவானதை அடுத்து, அதனைப் பிடிக்கும் முயற்சி தோல்வியடைந்ததால், கும்கி யானைகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.
மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியே சுற்றி வந்த பாகுபலி என்றழைக்கபடும் ஆண் காட்டு யானையைப் பிடித்து, அதன் கழுத்தில் ஜி.பி.எஸ் கருவியுடன் கூடிய ரேடியோ காலரை பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டனர்.
இதற்காக கோவை டாப்ஸ்லிப் வனத்துறை முகாமில் இருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் என மூன்று கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் வரவழைக்கப்பட்டன. ஆனால், வனத்துறையினர் திட்டமிட்டதில் இருந்து சிக்காமல் புதர்களுக்குள்ளும், காடுகளுக்குள்ளும் ஓடி ஒளிந்து போக்கு காட்டிய பாகுபலி, கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக யார் கண்களிலும் தென்படாமல் நெல்லிமலை என்னும் அடர்ந்த மலை காட்டிற்குள் சென்று தலைமறைவானது.