வீடியோ ஸ்டோரி

பழ வௌவால்கள், பாதிக்கப்பட்ட நபர்கள் மூலம் பரவக்கூடியது நிபா வைரஸ்

Sinekadhara

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால ஒருவர் உயிரிழந்த நிலையில், கன்னியாகுமரி, தென்காசி, கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தமிழக பொதுப்பணித்துறை இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரளாவில் கொரோனா பெருந்தொற்றே இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் நிபா வைரஸின் தாக்குதலும் கண்டறிப்பட்டு, அம்மாநில மக்களை கலக்கமடையச் செய்துள்ளது. அந்த வகையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வழூர் என்ற இடத்தில் நிபா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான். நிபா வைரஸ் தாக்கி சிறுவன் மரணமடைந்த சம்பவம் கேரள மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதனிடையே, கேரளாவுக்கு உதவிட சிறப்புக்குழு ஒன்றை மத்திய அரசு அங்கு அனுப்பி வைத்தது. அக்குழுவினர், சிறுவனின் இல்லத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

நிபா வைரஸ் பரவலுக்கான காரணத்தை கண்டறிவதற்காக அச்சிறுவனின் வீட்டருகில் கிடைக்கும் ரம்புடான் பழங்களின் மாதிரிகளை அவர்கள் சேகரித்துள்ளனர். இப்பழங்களை உண்ணும் வௌவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவியதா என்பதைக் கண்டறிய இந்த மாதிரி உதவும் என்று அவர்கள் கூறியுள்ளனர். அப்பகுதி மக்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்திய மத்தியக்குழு, வைரஸூக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளனர்.

இதனிடையே, சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருவோரை கண்காணிப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாகக் கூறினார். இருப்பினும், கேரளா - தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளதாகவும், அங்கிருந்து வருவோர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இருப்பினும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கேரள எல்லைப்பகுதிகளில், மூன்றில் மட்டுமே வாகன சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. மற்றப்பகுதிகள் வழியாக கேரளாவிலிருந்து நாள்தோறும் ஏராளமானோர் தமிழ்நாட்டுக்கு எவ்வித கட்டுப்பாடும் இன்றி வந்து செல்வதாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.