நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் உடனே கையெழுத்திட்டு அனுமதிக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தில் நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி கனிமொழியின் வீட்டிற்கு வந்து அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மாணவியின் தந்தை கருணாநிதியிடம் ஒரு லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசு வறட்டு பிடிவாதம் பிடிக்காமல் தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட மசோதாவை உடனடியாக சட்டமாக்கும் வகையில் ஒப்புதல் அளிக்க வேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது.
நீட் மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் ஜல்லிகட்டை போல் பறந்துபட்ட வெகு மக்களின் போராட்டமாக இது வெடிக்கும். அந்த நிலைக்கு மத்திய அரசு அனுமதிக்காது என நம்புகிறேன். நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் உடனே கையெழுத்திட்டு அனுமதிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிக்கலாம்: டெல்லி வரும் தமிழக மக்கள் எனது அரசு வீட்டினை பயன்படுத்திக் கொள்ளலாம்: திருவள்ளூர் எம்.பி