வீடியோ ஸ்டோரி

காஞ்சிபுரம்: பாலாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நகராட்சி பம்ப் ஆப்பரேட்டர்!

Sinekadhara

காஞ்சிபுரம் அருகே குருவிமலை பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் இன்று காலை அடித்துச் செல்லப்பட்ட பம்ப் ஆப்பரேட்டரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம் உள்பட 16 மாவட்டங்களுக்கு நேற்றைய தினம் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றைய தினம் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர் கனமழையின் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் அணைக்கட்டிலிருந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 1 லட்சத்து 4ஆயிரத்து 54 கன அடி நீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டது. அதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குருவிமலை பாலாற்றில் இருக்கக்கூடிய நீர் மோட்டாரை இயக்க இன்று அதிகாலை சென்ற சின்னையங்குளம் பகுதியைச் சேர்ந்த மாநகராட்சி பம்ப் ஆப்பரேட்டர் கருணா (54) என்பவர் எதிர்பாராத விதமாக வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டார். நீரில் தத்தளித்தவாறு உயிருக்குப் போராடிய அவர், அருகிலிருந்த மரக்கிளை ஒன்றை பிடிக்க முற்பட்டப்போது நீரின் வேகத்தால் மரக்கிளையை பிடிக்க முடியாமல் போகவே அவர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டார். மேலும் வெள்ளம் அதிகமாகச் சென்றதால் மீட்புத்துறையினராலும் அவரை மீட்க முடியவில்லை. வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டவர் நிலைகுறித்து இதுவரை எவ்வித தகவலும் தெரியாததால் அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

பாலாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கி பம்ப் ஆப்பரேட்டர் கருணா நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.