வீடியோ ஸ்டோரி

`அன்பு செய்ங்க பாஸ்... லைஃப் நல்லாருக்கும்!‘- இந்த நாளை இனிமையாக்கும் குட்டி ஸ்டோரி!

நிவேதா ஜெகராஜா

உங்களின் இந்த நாளை அழகாக்க, அன்பு ஒருவருக்கு எந்தளவுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என்பதை உணர்த்தும் ஒரு குட்டி ஸ்டோரி, இங்கே!

பர்மாவில் உள்நாட்டு கலவரம் நடந்த போது, நடந்த சம்பவம்தான் இது. அங்கிருந்த மக்கள் அனைவரும் கால்போகும் திசையில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருக்கிறனர். அதில் ஒரு தாத்தா - மகன் - பேரனும் இருந்துள்ளனர்.

அவர்களில் அந்த முதியவரால், ஒருகட்டத்துக்கு மேல் நடக்க முடியவில்லை. அவர் அங்கேயே ஒரு இடத்தில் அமர்ந்துக்கொண்டு, `நான் பார்த்துக்கிறேன். நீங்க பார்த்துபோங்க. நான் இங்கேயே கூட இருந்துக்கிறேன். கொஞ்ச நேரம் கழிச்சு, கொஞ்சம் கொஞ்சமா உங்களோடு வர்றேன்’ என்று சொல்லிவிட்டு அங்கேயே உட்கார்ந்திருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் மகன், `இப்படியே இங்கயே உட்கார்ந்துக்கவா ப்பா உங்களை அழைத்து வந்தோம்... வாங்க நாம கிளம்பலாம்.!’ என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்ட தந்தை, `இல்லப்பா என்னால முடியலை’ என்றிருக்கிறார். வெகுநேரம் சமாதானப்படுத்தியும் தன் தந்தையை சமாதானப்படுத்த முடியாத அவர், ஒரு கட்டத்தில் தன்னுடைய மகனை அழைத்து வந்திருக்கிறார். வந்துவிட்டு, `அப்பா, இனி என் மகன் உங்களோட பொறுப்பு. நீங்க வரும்போது, அவனையும் அழைச்சுட்டு வந்துடுங்க. இல்லனாலும் பரவால. இங்க என் மகன், உங்க அரவணைப்புலயே இருக்கட்டும்’ என்றிருக்கிறார். இதைக்கேட்ட அந்த முதியவர், சில நிமிடங்கள் பார்த்துவிட்டு, தன் பேரனை முதுகில் ஏற்றி அமர்த்தியபடி மீண்டும் தன் பயணத்தை உத்வேகத்துடன் தொடங்கியிருக்கிறார்.

இதைக்கண்ட அந்த மகனுக்கு, சற்று ஆச்சர்யம்தான் என்றாலும்கூட இதன் பின்னிருந்த அன்பை அவரால் உணர முடிந்தது. மகனுக்கு அப்பாவையும் தாத்தாவுக்கு பேரனையும் பிரிய மனமில்லை.

`மனிதர்கள் மத்தியில் அன்பு இல்லை, அன்பு இல்லை’ என சொல்லிக்கொண்டே இருக்கிறோம். உண்மையில், அந்த அன்பை நாமே உணராமல் இருக்கிறோம். ஒருமுறை உணர்ந்துவிட்டால், அதன்பின் நம்மால் நிச்சயம் எவ்வளவு பெரிய போரையும், கலவரத்தையும் வெல்ல முடியும்.

அட, அன்புதானே எல்லாம்...! அன்பு செய்வோம்!