வீடியோ ஸ்டோரி

''வீட்ல இருக்கவே பயமா இருக்கு'' - மோசமான குடியிருப்பால் களங்கும் புளியந்தோப்பு வாசிகள்

''வீட்ல இருக்கவே பயமா இருக்கு'' - மோசமான குடியிருப்பால் களங்கும் புளியந்தோப்பு வாசிகள்

PT WEB

குடிசைகள் இல்லாத தமிழ்நாடு, அனைவருக்கும் வீடு என்ற திட்டங்கள் அறிவிக்கப்படுவதும், அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்படுவதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், அந்த கட்டடங்களின் தரம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது சென்னை புளியந்தோப்பில் உள்ள கேசவப்பிள்ளை பூங்கா பன்னடுக்கு குடியிருப்பு. அதிர வைக்கும் இந்த கட்டடத்தின் நிலை குறித்த புதியதலைமுறையின் கள ஆய்வை பார்க்கலாம்.

வானுயர்ந்து நிற்கின்றன பன்னடுக்கு குடியிருப்புகள். வண்ணங்கள் பளிச்சிட வெளிப்பார்வைக்கு கம்பீரமாக காட்சியளிக்கின்றன. புதிய இல்லம்.புதிய வாழ்க்கை என்ற வாசகங்களை பார்க்கும்போது உற்சாகம் பொங்குகிறது. ஆனால், கட்டிமுடிக்கப்பட்டு இரண்டு, மூன்று ஆண்டுகளே ஆகியிருக்கும் இக்கட்டடங்களின் நிலைதான் அதிர்ச்சியடைய வைக்கிறது.

கட்டடத்தின் தூண் பகுதி இது. தொட்டாலே வெளிப்பூச்சு உதிர்ந்து, உள்ளிருந்து இறுக்கமற்ற மணல் தூசிபறக்கிறது. இங்கு மட்டுமல்ல, வீட்டுக்கு உள்ளேயும் இதேநிலைதான். சுற்றுச்சுவர், உள்சுவர், மேற்கூரை என எங்கெங்கு காணினும் காரை பெயர்கிறது. ஒரு விரலால் லேசாக தொட்டாலே சுவர் பெயர்ந்து மண் கொட்டுகிறது.

குடிநீர் இணைப்பு இல்லை, போதிய மின்சார இணைப்பு இல்லை, லிஃப்ட் வசதி இல்லை என்றபோதும் வேறு வழியின்றி குடியேறியவர்கள், அச்சத்துடனேயே நாட்களை கழிப்பதாக கூறுகிறார்கள். பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் மற்றும் அடையாறு கரை ஓரம் குடிசைகளில் வசிக்கும் மக்களை குடியமர்த்த சென்னை புளியந்தோப்பு கேசவபிள்ளை பூங்கா பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 2018 முதல் 2021 வரை இரண்டு கட்டங்களாக அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டியது. இரண்டு தனியார் கட்டுமான நிறுவனங்கள் இதில் பங்காற்றியுள்ளன.

முதல்கட்டப்பணிகள் 2018 முதல் 2020 வரை 17 மாதங்கள் நடந்தன. 112.16 கோடி ரூபாய் செலவில் 864 வீடுகள் கட்டப்பட்டன. இரண்டாம் கட்ட பணிகள் 2019 இல் தொடங்கி 2021 வரை 18 மாதங்கள் நடந்தன. 139.13கோடி ரூபாய் செலவில் 1056 வீடுகள் கட்டப்பட்டன. பன்னடுக்கு குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு வீடும் 14.61 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டதாக குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், இந்த வீடுகளின் நிலையை பார்க்கும்போது கட்டுமானப்பொருட்களின் தரம் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. இந்த வீடுகளில் எப்படி அச்சமின்றி வசிப்பது என்ற இவர்களின் கேள்விக்கு பதில் கூறப்போவது யார்?