பேரவையில் சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த ஆலை எதிர்ப்பு குழுவினர் நேரம் கேட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் உடல் உறுப்புகளை இழந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் அண்மையில் திறக்கப்பட்டு மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்பு சட்டம் இயற்றி அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்காக திமுக எம்.பி. கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரை சந்தித்து ஸ்டெர்லை ஆலை எதிர்ப்பு குழுவினர் மனு அளித்துள்ளனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க அவர்கள் நேரம் கேட்டுள்ளனர்.