4 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கோடநாடு தமிழக அரசியல் களத்தில் முதன்மை இடம்பிடித்துள்ளது.
கோடநாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்துக்கொள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த பதிலே சாட்சியாக உள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2012 ஆம் ஆண்டில் வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில், மக்கள் பணி செய்யும் முதலமைச்சர் குளு, குளு கோடநாட்டில் ஓய்வு எடுப்பதா என்று வெளியான செய்தியை சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாடு தமிழ்நாட்டில் தானே இருக்கிறது என்று கூறியதோடு அது முதலமைச்சர் ஓய்வு இடம் இல்லை, முதலமைச்சரின் முகாம் அலுவலகம் என்று ஆங்கிலத்திலும் அடித்துக் கூறினார். ஆம், அதனால்தான் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு இன்றும் பேசு பொருளாக இருக்கிறது.
தமிழகத்தில் எத்தனையோ கோடை வாசஸ்தலங்கள் இருக்க முகாம் அலுவலகமாக கோடநாட்டை ஜெயலலிதா தேர்ந்தெடுக்க காரணம் என்ன? ஜெயலலிதாவின் உடல் சிறிதளவு வெப்பத்தைக் கூட ஏற்றுக்கொள்ளாது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தான் இருக்கும் இடம் எப்போதும் குளிராகவே இருப்பதை அவர் விரும்புவார். அவருடைய அறை கிட்டத்தட்ட மைனஸ் 18 டிகிரிக்கு இணையாக குளிர் இருக்கும் என்கிறார்கள். மின் சாதனங்கள் மூலம் குளிரூப்பட்ட இடங்களை விட இயற்கையாகவே இப்படி ஒரு இடம் தமிழகத்தில் இருந்தால் எப்படி இருக்கும், அப்படி ஒரு இடம் தான் கோடநாடு.
சுவிட்ஸர்லாந்துக்கு இணையான சீதோஷ்ண நிலையைக்கொண்டது கோடநாடு. காரணம், பாலக்காடு கணவாயில் இருந்து வெப்பக் காற்று நேராக கோடநாடு மலையை வந்தடைந்து, இங்கு உள்ள குளிர் காற்றுடன் கலப்பதால் ஒருவித இதமான கால சூழ்நிலை இங்கு தானாக ஏற்படுகிறது. அந்த காலநிலைதான் சுவிட்ஸர்லாந்தின் சீதோஷண நிலையை நிகராக இருக்கிறது.
அப்படி 900 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படும் கோடநாடு எஸ்டேட்டை 1995 ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் கூட்டாக சேர்ந்து இங்கிலாந்தைச் சேர்ந்த கிரேக் ஜோன்ஸ் என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளனர். அதனை சீரமைத்து ஆட்சியில் இருக்கும் போது முதலமைச்சரின் முகாம் அலுவலகமாகவும், ஆட்சியில் இல்லாத போது ஓய்விடமாகவும் பயன்படுத்தி வந்தார் ஜெயலலிதா.
இந்தநிலையில் தான், 2016ம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீர் உடல்நல குறைவு, தொடர் சிகிச்சை, உயிரிழப்பு என்ற நிகழ்வுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. மரணத்தில் மர்மம் என்ற குரல்களும், மறுபுறம் ஒலிக்கத் தொடங்கின. இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் பங்குதாரர்களான ஜெயலலிதா தோழி சசிகலா, இளவரசி ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றனர். முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலா சிறைக்குச் சென்றதால், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். மறுபுறம் ஓ.பன்னீர் செல்வம் தர்ம யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போதுதான், 23-4- 2017 அன்று இரவு கோடநாடு பங்களாவில் அதிரவைக்கும் கொலை, கொள்ளை நிகழ்ந்தது.