வீடியோ ஸ்டோரி

கேரளா: கனமழை காரணமாக வெள்ளக்காடான பத்தனம்திட்டா சுற்றுவட்டாரப் பகுதி

நிவேதா ஜெகராஜா

கனமழை காரணமாக கேரள மாநிலம் பத்தனம்திட்டா சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், கேரளாவின் பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

கேரளாவில் கோட்டயம், பத்தனம்திட்டா உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்யும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கேரளாவின் மலைப்பகுதி மாவட்டங்களான கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து மலைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவம் மற்றும் இந்திய விமானப் படையின் உதவியை கேரள அரசு நாடியுள்ளது.

கனமழை காரணமாக பம்பை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. வயல்வெளிகள், வாழைத்தோட்டங்கள் என கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகள், முகாம்கள் போன்றவற்றில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.