வீடியோ ஸ்டோரி

வெள்ளத்தில் தத்தளிக்கும் கன்னியாகுமரி மாவட்டம்

கலிலுல்லா

கன்னியாகுமரி மாவட்டம் பருத்திக்கடவு, நெடும்புறம், வைகலூர் பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளித்த மக்களை படகு மூலம் மீனவர்களும், காவல்துறையினரும் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. அனைத்து நீர்நிலைகளும் முழுமையாக நிரம்பியதால், ஊருக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகள் தீவு போல காட்சியளிக்கின்றன. குறிப்பாக பருத்திக்கடவு, நெடும்புறம், வைகலூர் உள்ளிட்ட பகுதிகளை தாமிரபரணி ஆற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால், 500-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சுமார் 8 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்திருப்பதால், மீனவர்கள் படகு மூலம் சென்று, அங்கிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பலர் கால்நடைகளை விட்டுவிட்டு, முகாம்களுக்கு வர தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. எனினும், உயிரை பணயம் வைத்து, முகாம்களுக்கு வர ஆர்வம் காட்டிய மக்களை, மீனவர்களும், காவல்துறையினரும் படகு மூலம் மீட்டு அழைத்து வந்தனர். அப்போது வெள்ளம் ஆர்ப்பரித்தால், படகை இழுத்து வரும்போது, காவல்துறையினர் தடுமாறி கீழே விழும் நிலையும் ஏற்பட்டது.