வீடியோ ஸ்டோரி

காஞ்சிபுரம்: வாக்களிக்க கொடுக்கப்பட்ட போலி தங்கநாணயம் - வாக்காளர்கள் அதிர்ச்சி

Veeramani

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போலி தங்க நாணயத்தை கொடுத்து வாக்குகளை பெற்ற சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. அடகுவைக்கச் சென்றபோது அவை பித்தளை எனத் தெரியவந்ததால் வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடந்தது. இதில் கொழுமணிவாக்கம் ஊராட்சியில் 2500 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் இங்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு கட்சி ஆதரவுடனும் சுயேட்சை சார்பிலும் பலர் போட்டியிட்டனர். நேற்று வாக்குப்பதிவின் போது ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக ஆதரவுடன் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட சாரதா விநாயகம் மற்றும் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட வார்டு உறுப்பினர் வேட்பாளர் சித்திரா அகியோருக்கு வாக்களிக்க வேண்டும் என தங்க நாணயங்களை கொடுத்ததாகவும் அதனை அடகு வைக்க சென்றபோது அது பித்தளை என தெரியவந்தது என்றும் மக்கள் குற்றம்சாட்டினார்கள்.

வாக்குப் பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுத்தால் தெரிந்துவிடும் என்ற காரணத்தினால் வாக்கு செலுத்த செல்லும்போது வாக்காளர்களை அழைத்து அவர்கள் கைகளில் மறைவாக தங்க நகை என பித்தளையை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பேசிய சுயேட்சை வேட்பாளர் கஸ்தூரி, “வாக்குகளுக்கு பணமோ, நகையோ, பரிசுப் பொருளோ கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால், கொழுமணிவாக்கம் ஊராட்சி மக்களோ போலி தங்க நாணயத்தை நம்பி வாக்களித்து ஏமாந்துவிட்டோமே என்ற கவலையில் இருக்கின்றனர். நூதன முறையில் மோசடி செய்த இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஊராட்சியில் மறு தேர்தல் நடத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும்” என தெரிவித்தார்

இது தொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் போவதாகவும், கொழுமணிவாக்கம் ஊராட்சியில் மறு தேர்தல் நடத்த வேண்டும் எனவும் வேட்பாளர்கள் வலியுறுத்துகின்றனர்.