தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான ஓமலூர், மேட்டூர், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் நீர் தேங்கியதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேட்டூரில் பெய்த மழை காரணமாக, மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. சூறைக்காற்று காரணமாக, வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட மிதிவண்டிகள் தூக்கி வீசப்பட்டன. சேலம் மாவட்டத்தில், அதிகபட்சமாக வீரகனூரில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பனிப்பொழிவுடன் பலத்த மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை, அழகியமண்டபம், திங்கள்சந்தை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. விட்டு விட்டு மழை பெய்து வருவதால், குளிச்சியான சூழல் நிலவுகிறது தொடர் மழை காரணமாக, தருமபுரி மாவட்டத்தில், 64 அடி கொண்ட வாணியாறு அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.